அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தும் காரின் சிறப்பு அம்சங்கள் , அதன் விலை தெரியுமா

" alt="" aria-hidden="true" />


 


அமெரிக்க அதிபர் டிரம்ப் எங்கு சென்றாலும் அவரது சாலை வழி பயணத்துக்கு பயன்படுத்தப்படுகிற சொகுசு கார் கேடிலாக் லிமவுசின் கார் ஆகும். இந்த காரின் செல்லப்பெயர் ‘தி பீஸ்ட்’.

இந்த கார் உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாகும். இதன் விலை அதிகமில்லை. 1.5 மில்லியன் டாலர். இந்திய மதிப்பில் சுமார் ரூ.10½ கோடி மட்டும்தான்). இது குண்டு துளைக்காத கார் ஆகும்.

இந்தக் காரின் எடை 9 டன்களுக்கும் அதிகம் .இந்த கார் ஜன்னல்கள் கண்ணாடி மற்றும் பாலிகார்போனேட்டுகளால் ஆன 5 அடுக்குகளை கொண்டதாகும். டிரைவர் அருகேயுள்ள ஜன்னலை மட்டும் 3 அங்குல அளவுக்கு திறக்க முடியும்.

காருக்குள் இருந்தே தாக்குதல் நடத்தும் துப்பாக்கிகள், கண்ணீர்ப்புகை குண்டு வீசும்சாதனங்கள் இருக்கும்.

ஜனாதிபதிக்கு காயம் ஏற்பட்டு, ரத்த இழப்பு ஏற்பட்டால் செலுத்துவதற்காக டிரம்ப் ரத்த பிரிவை சேர்ந்த ரத்த பாட்டில்கள் ஒரு ஃபிரிஜ் நிறைய இருக்கும்.

டிரைவர் கேபினில் அனைத்து அதிநவீன தொலைத்தொடர்பு சாதனங்களும் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த காரின் வெளிப்புறமானது, ராணுவ வாகனங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய உறுதியான உருக்கு, டைட்டேனியம், அலுமினியம் மற்றும் செராமிக்ஸ் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரின் முன் பாகத்தில் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசும் கருவி, இரவு நேரங்களில் புகைப்படங்கள் எடுக்கும் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கார் டிரைவர், அமெரிக்க ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அளிக்கும் ரகசிய சேவை படையின் பயிற்சி பெற்றவர். போர்க்கால நடவடிக்கைகள் இவருக்கு அத்துப்படியாக இருக்கும்.

செயற்கை கோள் தொலைபேசி வசதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியில் துணை ஜனாதிபதி மைக் பென்சுடனோ, அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனுடனோ எந்த நிமிடமும் தொடர்பு கொண்டு பேச முடியும். டிரம்புடன் 4 பேர் வசதியாக அமர்கிற வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. டிரம்ப், டிரைவர் இடையே ஒரு கண்ணாடி இருக்கும். இதை ஜனாதிபதி டிரம்ப் மட்டுமே திறக்க முடியும்.

நெருக்கடியான காலத்தில் பதற்றமான சூழலில் அழுத்துவதற்காக அவசர கால பொத்தான் (பேனிக் பட்டன்) உள்ளது.

ஆக்சிஜன் சிலிண்டரும் காரில் இருக்கிறது.காரில் உள்ள ஆயில் டாங்க் மீது குண்டு விழுந்தால் கூட வெடிக்காத அளவுக்கு உறுதியான பாதுகாப்பு கவசங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கார் உருக்கு ரிம் கொண்டதாகும். எனவே டயர் பஞ்சர் ஆகாது. டயர் வெடித்தாலும் விபத்து நேராது. தப்பிச்செல்லும் லாவகம் உள்ளது.

காரில் இருந்தவாறு வெள்ளை மாளிகையுடன் எந்த நேரமும் தொடர்பு கொள்ள முடியும்.

டிரம்ப் காருடன் வருகிற பாதுகாப்பு வாகனங்களில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இவை அணு, ரசாயன, உயிரி ஆயுத தாக்குதல்களை கண்டுபிடித்து விடக்கூடிய ஆற்றல் வாய்ந்ததாகும்.

டிரம்ப் காருடன் வருகிற பாதுகாப்பு வாகனங்களில் மந்திரிகள், டாக்டர்கள், உயர் ராணுவ அதிகாரிகள் பயணம் செய்வார்கள்.